×

திமுகவின் குரலாக மாநிலங்களவையில் ஒலித்த திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

சென்னை: திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி(56). அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை திடீரென அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வசந்தி ஸ்டான்லி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வசந்தி ஸ்டான்லி சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் பிறந்தவர். சட்டம் பயின்ற அவர், திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர், தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர், திமுக மகளிர் சிறுபான்மை அணித் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். 2008-2014 காலகட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார். இவரது கணவர் ஸ்டான்லி திருநெல்வேலியை சேர்ந்தவர். பத்திரிகையாளரும், சிறந்த எழுத்தாளருமாக திகழ்ந்தவர்.

மறைந்த வசந்தி ஸ்டான்லி உடல் ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, திமுகவினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது உடல் கணவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு  கொண்டு செல்லப்பட்டு, அங்கு இன்று காலை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக மகளிர் சிறுபான்மை அணி தலைவருமான வசந்தி ஸ்டான்லி திடீர் மறைவு என்ற துயரச் செய்தி என்னை பெரும் துயரத்திற்குள்ளாக்கியுள்ளது. அவரது மறைவிற்கு திமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை திமுகவின் குரலாக மாநிலங்களவையில் பல்வேறு முக்கிய பிரச்னைகளில் ஒலித்தவர் வசந்தி ஸ்டான்லி. திமுக நடத்திய போராட்டங்களில் தடந்தோள் தட்டி தவறாது முன்னின்றவர். தலைவர் கலைஞரால் “கழகத்தின் கருவூலம்” என்று பாராட்டப்பட்டவர்.

வருவாய் துறையிலும், வணிகவரி துறையிலும் அரசு ஊழியராக இருந்த அவர் பொது வாழ்விற்கு வந்தவர். திமுக மகளிர் அணி துணை செயலாளராகவும் பொறுப்பெடுத்து பணி செய்தவர். திமுகவின் பேச்சாளராக மட்டுமல்ல தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் திமுகவின் கருத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தவர். கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சிப் பணியிலும், மக்கள் பணியிலும் சிறப்பாகவும், செம்மையாகவும் பணியாற்றியவர். வசந்தி ஸ்டான்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், கட்சியின் உடன்பிறப்புகள்-அனைவருக்கும் எனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vasanthi Stanley ,DMK ,death ,Dikshit , DMK, Voice, Rajya Sabha, MP Vasanthi Stanley, Dying, MK Stalin, Tribute
× RELATED சாலை விபத்தில் படுகாயமடைந்த திருமழிசை திமுக பேரூராட்சி தலைவர் காலமானார்